வழிபாடு
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்

Published On 2022-01-20 08:13 GMT   |   Update On 2022-01-20 08:13 GMT
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். அதுபோன்று குழந்தைகளும் பால்குடம் எடுத்து வந்தனர்.
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச விழா நடந்தது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் இங்கு வந்த பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள படிக் கட்டில் நின்று வழிபட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டது. இதையடுது்து கோ பூஜை மற்றும் மூலவருக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 5 நாட்களாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர் கள் அதிகாலை முதலே காவடி, பால்குடம் எடுத்து வரத் தொடங்கினார்கள்.

நேரம் செல்ல செல்ல ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். அதுபோன்று குழந்தைகளும் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) தைப்பூச விழாவின் ஒரு பகுதியாக சுவாமி திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
Tags:    

Similar News