செய்திகள்
மர்ம ஆசாமிகள் கற்களை வீசியதில் அரசு பஸ்சின்முன் பக்க கண்ணாடி உடைந்து இருப்பதை காணலாம்.

மங்கலம் அருகே அரசு பஸ் மீது கற்களை வீசி கண்ணாடி உடைப்பு

Published On 2020-11-21 14:11 GMT   |   Update On 2020-11-21 14:11 GMT
மங்கலம் அருகே அரசு பஸ் மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பத்தில் ஈடுபட்ட ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
மங்கலம்:

திருப்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சோமனூர் நோக்கி அரசு பஸ் (தடம் எண்-5) நேற்று இரவு 8 மணிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் மங்கலத்தை அடுத்த வி.அய்யம்பாளையம்- சைசிங் பஸ் நிறுத்தம் அருகே வந்தது. அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் வந்தனர்.

அந்த ஆசாமிகள் 2 பேரும் திடீரென்று பஸ்சின் முன்புற கண்ணாடி மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இதனால் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து பஸ்சை நிறுத்திய டிரைவர் அந்த ஆசாமிகளை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அந்த பஸ்சில் வந்த பயணிகள் மற்றொரு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர், அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளருக்கும், மங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மற்றும் அந்த ஆசாமிகளின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மங்கலத்தில் அரசு பஸ் மீது மர்ம ஆசாமிகள் கற்களை வீசி, கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News