செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரிப்பு

Published On 2021-10-19 22:47 GMT   |   Update On 2021-10-19 22:47 GMT
விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 30 சதவீதம் வரை காய்கறி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் தேவை காரணமாக காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது.
சென்னை:

தொடர் மழை காரணமாக விளைச்சல்-வரத்து பாதிக்கப்பட்டதின் எதிரொலியாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும், அவரை ரூ.60-க்கும், இஞ்சி ரூ.70-க்கும் விற்பனை ஆகிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே காய்கறி விலை உயர்ந்தே காணப்படுகிறது. அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி பயிரிடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது.

காய்கறி வரத்து குறைவால் விலை அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறி விலை அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல்காதர் கூறியதாவது:-

விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 30 சதவீதம் வரை காய்கறி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் தேவை காரணமாக காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது.



அந்தவகையில் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்ற ஒரு கிலோ அவரை தற்போது ரூ.60-க்கு விற்பனை ஆகிறது. ரூ.55 வரை விற்பனையான இஞ்சி ரூ.70-க்கும், தக்காளி விலை ரூ.10 அதிகரித்து ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது.

அதேபோல பீன்ஸ், கத்தரி, வெண்டை, பீர்க்கங்காய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.10 உயர்ந்திருக்கிறது. பாகற்காய், பச்சை மிளகாய், முள்ளங்கி, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு உள்ளிட்டவற்றின் விலை ரூ.5-ம் உயர்ந்திருக்கிறது.

இன்னும் வரும் நாட்களில் வரத்து பாதிக்கப்படும் பட்சத்தில் காய்கறி விலை மேலும் உயரலாம். ஆனால் அழுகும் பொருட்கள் என்பதால் காய்கறி விலையை தீர்மானிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம் வருமாறு (மொத்தவிலையில்/கிலோவில்) :-

பீன்ஸ்-ரூ.50, அவரை-ரூ.60, பாகற்காய் (பன்னீர்) -ரூ.45, பாகற்காய் (பெரியது) -ரூ.45, கத்தரி-ரூ.40, வெண்டை-ரூ.40, புடலங்காய்-ரூ.35, கோவைக்காய்- ரூ.30, சுரைக்காய்-ரூ.35, பீர்க்கங்காய்-ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.30 முதல் ரூ.35 வரை, பீட்ரூட்-ரூ.30, கேரட் (ஊட்டி) -ரூ.60, கேரட் (மாலூர்) -ரூ.55 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி-ரூ.30, முட்டைக்கோஸ்-ரூ.20, இஞ்சி-ரூ.70, சாம்பார் வெங்காயம்-ரூ.40 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்) -ரூ.50, பல்லாரி (ஆந்திரா) -ரூ.30 முதல் ரூ.35 வரை, தக்காளி-ரூ.50, சேனைக்கிழங்கு-ரூ.35, சேப்பங்கிழங்கு-ரூ.35, காலிபிளவர் (ஒன்று) -ரூ.30, முருங்கை-ரூ.40, உருளைக்கிழங்கு-ரூ.25 முதல் ரூ.30 வரை.

கோயம்பேடு மார்க்கெட்டை காட்டிலும் 2-ம் தர வியாபாரிகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் காய்கறி விலை 30 முதல் 40 சதவீதம் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில் (கிலோவில்) பீன்ஸ் ரூ.80-க்கும், பாகற்காய் ரூ.50-க்கும், கத்தரி ரூ.68-க்கும், வெண்டை ரூ.63-க்கும், புடலை ரூ.50-க்கும், கோவைக்காய் ரூ.58-க்கும், சுரைக்காய் ரூ.50-க்கும், பீர்க்கங்காய் ரூ.50-க்கும், பீட்ரூட் ரூ.74-க்கும், பல்லாரி வெங்காயம் ரூ.55 முதல் ரூ.60-க்கும், தக்காளி ரூ.80 வரையிலும், சேனை மற்றும் சேப்பங்கிழக்கு ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், முருங்கை ரூ.120-க்கும், உருளைக்கிழங்கு ரூ.65 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

வாகன கட்டணம், பணியாளர் கூலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மார்க்கெட் விலையை விட கூடுதலாக விற்பனை செய்யவேண்டி உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News