செய்திகள்
திருப்பூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பூக்கள், பூசணிக்காய், கரும்புகளை படத்தில் காணலாம்.

ஆயுதபூஜை பொருட்கள் வாங்க மார்க்கெட்டுகளில் குவியும் பொதுமக்கள்

Published On 2021-10-12 08:48 GMT   |   Update On 2021-10-12 08:48 GMT
பொதுமக்கள் கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நேற்று முதலே பூஜை பொருட்களை வாங்கி வருகின்றனர்.
திருப்பூர்:

பின்னலாடை நகரான திருப்பூரில் ஆயுதபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களில் இப்போதே ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

நிறுவனங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் இப்போதே வாங்கி வருகின்றனர். இதேப்போல் பொதுமக்களும் கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நேற்று முதலே  பொரி, அவல், கடலை, கரும்புகள், பூசணிக்காய், வாழைக்கன்று உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர்.  

இதனால் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சந்தைகள் மற்றும் முக்கிய பஜார்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. 

ஆயுதபூஜை காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது- அதன்படி ஒரு கிலோ மல்லிப்பூ - ரூ.800க்கு விற்கப்படுகிறது. அரளி - ரூ.400, செவ்வந்தி - ரூ.200, சம்பங்கி - ரூ.250, தாமரை பூ -  ஒன்று ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வீடுகளை அலங்கரிப்பதற்காக  அலங்கார பொருட்களையும் வாங்கி செல்கின்றனர். இதனால் அவற்றின்  விற்பனை சூடுபிடித்துள்ளது. 

மேலும் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயுதபூஜை விற்பனைக்காக ஆங்காங்கே சிறிய கடைகளும் முளைத்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப் பிடித்து பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News