ஆன்மிகம்
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்

கொரோனாவால், 7 மாதங்களுக்கு பிறகு தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் மீண்டும் மூடப்பட்டது

Published On 2021-04-17 08:12 GMT   |   Update On 2021-04-17 08:12 GMT
கொரோனா 2-வது அலை தாக்கம் எதிரொலியாக தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்கள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மூடப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் ஐராவதீஸ்வரர் கோவில் மூடப்பட்டது. அதாவது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் மூடப்பட்டது. பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைந்ததையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்க உத்தரவிட்டதையடுத்து ஐராவதீஸ்வரர் கோவில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு புராதன சின்னங்களை மே 15-ந் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது.

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. யுனெஸ்கோ அமைப்பால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இதனால் கோவில் உள்ள பகுதி மற்றும் கோவிலை சுற்றியுள்ள பூங்கா உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 7 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் கோவில் மூடப்பட்டது. இதனால் கோவில் வளாகம் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அடுத்த மாதம் மே 15-ம் தேதி வரை கோவில் வளாகத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News