பெண்கள் உலகம்
நிதி மேலாண்மையில் பெண்கள்

நிதி மேலாண்மையில் பெண்கள் சிறந்து விளங்க காரணம் என்ன?

Published On 2022-03-21 06:04 GMT   |   Update On 2022-03-21 09:20 GMT
ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய ஆய்வில் ஆண்களை விட பெண்கள் நிதி விஷயத்தில் சிறந்த முடிவுகளை எடுப்பதாக 67 சதவீதம் பேர் நம்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் நிதி மேலாண்மை விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். சில தேவையற்ற செலவுகளை செய்வது போல் தோன்றினாலும் சேமிப்பு விஷயத்தில் கறாராக இருப்பார்கள் என்ற கருத்து நிலவுவதுண்டு.

சமீபத்திய ஆய்வு முடிவும் அதை உறுதிபடுத்தியுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய ஆய்வில் ஆண்களை விட பெண்கள் நிதி விஷயத்தில் சிறந்த முடிவுகளை எடுப்பதாக 67 சதவீதம் பேர் நம்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப ஆன்லைன் வழியாகவே பெரும்பாலான பரிமாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட 41 சதவீத பயனர்கள் ஆன்லைனில் உள்ளிடும் தங்களது தனிப்பட்ட தகவல்கள், நிதி சார்ந்த விவரங்களின் பாதுகாப்பு மீது கூடுதல் கவனம் செலுத்து கிறார்கள். கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 48 சதவீதம் பேர் நிதி விஷயத்தில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய ஆய்வின்போது கேட்கப்பட்ட கேள்வி களுக்கு பதிலளித்தவர்களில் 67 சதவீதம் பேர் ஆண்களை விட பெண்கள் நிதி மற்றும் முதலீட்டு விஷயத்தில் சரியான முடிவுகளை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைவதற்கு முன்பு நிதி விஷயத்தில் பலரும் தாராளம் காட்டி இருக்கிறார்கள் என்பதையும் ஆய்வு முடிவு சுட்டிக்காட்டியுள்ளது. வீட்டுச் செலவினங்களை பொறுத்தவரை அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற வகைகள் என தரம் பிரித்து இரு வகைகளிலும் செலவுகளை பெருமளவில் குறைப்பதற்கு பழகி இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு இதனை உறுதிபடுத்துவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

"இந்த ஆய்வு நுகர்வோர் மத்தியில் கொரோனா பற்றிய அச்சத்தையும், கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமைக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பையும் பதிவு செய்தது. அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற மற்றும் உடல்நலம் தொடர்பான செலவுகளை எதிர்கொண்டாலும் மூன்றாவது அலையில் நிதி ரீதியாக கடும் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை என்று பலரும் கூறி இருக்கிறார்கள்’’ என்கிறார், ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பின் நிர்வாக அதிகாரி பிரதீப் குப்தா.

சமீபகாலமாக ஒட்டுமொத்த வீட்டுச் செலவு 53 சதவீத குடும்பங்களுக்கு அதிகரித்துள்ளது. அதேவேளையில் 33 சதவீத குடும்பங் களுக்கு ஒட்டுமொத்த செலவினம் ஒரே மாதிரியாக உள்ளது. 43 சதவீத குடும்பங்களுக்கு தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், கடந்த ஐந்து மாதங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவானதாகும்.

உடல்நலம் தொடர்பான உணவு பொருட்கள், மருத்துவ செலவு போன்றவைதான் ஒட்டுமொத்த செலவுகள் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கின்றன. இருப்பினும் பெண்கள் நிதி நிலைமையை சிறப்பாக கையாள்வதன் மூலம் ஓரளவு செலவுகளை கட்டுப்படுத்திவிடுகிறார்கள். கொரோனா ஏற் படுத்தி இருக்கும் வாழ்வியல் மாற்றமும் அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
Tags:    

Similar News