செய்திகள்
சந்திரபாபு நாயுடு

ஏலூரில் சுகாதார அவசரநிலை: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

Published On 2020-12-10 02:27 GMT   |   Update On 2020-12-10 02:27 GMT
மர்மநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏலூரில் உடனடியாக சுகாதார அவசரநிலையை அறிவிப்பதுடன், சிறப்புக் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் நிறுவ வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
விஜயவாடா :

ஆந்திர மாநிலம் ஏலூரில் கடந்த 5 நாட்களாக மர்மநோயால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் பருகும் தண்ணீர், பாலில் உள்ள கனஉலோகத்தன்மையே இப்பாதிப்புக்கு காரணம் என்று ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

‘ஏலூரில் குடிநீரில் கனஉலோகத்தன்மை இருப்பதாகத் தெரியவந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். நடமாடும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் மூலம், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வினியோகிக்க வேண்டும்.

ஏலூரில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் மின்னணு சுகாதார அட்டை வழங்கி, நீண்டகால அடிப்படையில் அவர்களை கண்காணிக்க வேண்டும்.

அங்கு உடனடியாக சுகாதார அவசரநிலையை அறிவிப்பதுடன், சிறப்புக் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் நிறுவ வேண்டும். உடனடி மருத்துவ நடவடிக்கை குழுக்களை அமைத்து, மர்மநோய் அறிகுறி உள்ள அனைவருக்கும் சிறந்த சிகிச்சையை அளிக்க வேண்டும்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News