செய்திகள்
பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால்

காஷ்மீரில் மனித உரிமை மீறல் - அமெரிக்க பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் தாக்கல்

Published On 2019-12-08 09:02 GMT   |   Update On 2019-12-08 09:21 GMT
காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை என இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.யான பிரமிளா ஜெயபால் அமெரிக்க பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
வாஷிங்டன்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ -சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதா, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒருங்கிணைந்த யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதியை இன்னொரு யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் மசோதா உள்பட 4 மசோதாக்களை பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தாக்கல் செய்தார்.

பின்னிரவு வரை இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பின்னர் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையிலும் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இரவு 7 மணிவரை நீடித்த விவாதங்களுக்கு பின்னர் இந்த 4 மசோதாக்கள் மீதும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன.

இந்த 4 மசோதாக்களும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் இவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி அன்றிரவு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டார்.

இதைத்தொடர்ந்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் சில பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கைபேசி, சமூக வலைத்தளங்கள் மற்றும் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டன.

இந்திய அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் சங்கத்தின் சில பிரிவினர் கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி சீயாட்டெல் நகரில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் பொதுச்சபைக்கு முதன்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற சிறப்பை பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.யான பிரமிளா ஜெயபால், காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் அங்கு தகவல் தொடர்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பிரசார இயக்கத்தை முன்னெடுத்து வந்தார்.



இந்த நடவடிக்கையை கைவிடுமாறு அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் பெரும்பகுதியினர் அவருக்கு கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 25 ஆயிரம் இ-மெயில்கள் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. சில முக்கிய பிரமுகர்கள் சென்னையில் பிறந்தவரான பிரமிளா ஜெயபாலை நேரில் சந்தித்தும் இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கைவிடுமாறு வலியுறுத்தினர்.

இருப்பினும், தனது முடிவில் உறுதியாக நின்ற குடியரசுக் கட்சியை சேர்ந்த எம்.பி.யான பிரமிளா ஜெயபால் அமெரிக்க பாராளுமன்ற பொதுச்சபையில் ஒரு தனிநபர் தீர்மானத்தை கடந்த 6-12-2019 அன்று தாக்கல் செய்துள்ளார். 

இந்த தீர்மானத்துக்கு ஸ்டீவ் வாட்கின்ஸ் என்ற ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இதன்மீது ஓட்டெடுப்பு ஏதும் நடத்த முடியாது. இதற்கு சட்டவடிவமும் கிடையாது என்ற நிலையில் பிரமிளா ஜெயபாலின் இந்த தனிநபர் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மற்றும் அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது தேவைக்கதிகமான பலப்பிரயோகம் செய்வது நிறுத்தப்பட வேண்டும். கைதானவர்களை விடுவிக்க ‘நான் இனிமேல் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட மாட்டேன். அரசியல் தொடர்பாக பேச மாட்டேன்’ என்று நிபந்தனை உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு கைவிட வேண்டும்.

மக்கள் அனைவருக்குமான மத சுதந்திரம், கருத்துரிமை, பேச்சுரிமை, சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்னும் சித்தாந்தங்களுடன் கொண்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய சாராம்சம் பாதுகாக்கப்பட வேண்டும். மதச்சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களின் மீது மதரீதியாக ஏவப்படும் உள்நோக்கம் கொண்ட வன்முறைக்கு இந்த தீர்மானம் கண்டனம் தெரிவிக்கின்றது.

இந்த தீர்மானத்தை தாக்கல் செய்த பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரமிளா ஜெயபால் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘கைபேசிகள் மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இந்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும். 

கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும். பேச்சுரிமை, அமைதியான முறையிலான போராட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் உயர்மட்டங்களில் நடைபெறும் உள்நோக்கமுள்ள மத வன்முறைகளை அரசு கண்டிக்க வேண்டும். 

காஷ்மீரில் குற்றச்சாட்டுகள் ஏதுமில்லாமல் மக்கள் சிறைவைக்கப்படுவது, தொலைத்தொடர்புகளை கட்டுப்படுத்துவது, காஷ்மீர் பகுதிகளுக்குள் பிறநாட்டு பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிப்பது போன்றவை நமது இருதரப்பு உறவுகளுக்கு தீமையாக அமைந்துவிடும் என்பதால் அமெரிக்கா-இந்தியா இடையிலான சிறப்புவாய்ந்த நல்லுறவுகள் பலப்படுவதற்கு போராடியவள் என்ற முறையில்தான் இந்த தீர்மானத்தை நான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்.

இந்திய அரசு மற்றும் எனது நண்பர்களான அமெரிக்க பாராளுமன்றத்தின் பொதுச்சபை உறுப்பினர்களுடன் இணைந்து அமெரிக்கா-இந்தியா இடையிலான நட்புறவை பலப்படுத்தவும் அதேவேளையில், காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் பாடுபட விரும்புகிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்தும் இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து, கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி அமெரிக்க பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.யான ரஷிதா டிலைப் என்பவர் தாக்கல் செய்த ஒரு தனிநபர் தீர்மானம் யாருடைய ஆதரவும் கிடைக்காமல் கவனிப்பாரற்றுப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News