செய்திகள்
மல்லிகார்ஜுன கார்கே

சாதி, மதத்தின் பெயரில் மக்களை பிரிக்க முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

Published On 2020-12-07 02:18 GMT   |   Update On 2020-12-07 02:18 GMT
சாதி, மதம், மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜகவினர் முயற்சி செய்வதாக பாஜக மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு :

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீடியோ மூலம் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்க முயற்சி செய்து வருகிறது. அம்பேத்கரை அவரது பிறந்த நாள், நினைவு நாள், அரசியல் சாசன நிறுவன நாள் ஆகிய நிகழ்ச்சிகளில் மட்டுமே நினைவு கூர்ந்தால் போதாது. அம்பேத்கரின் பெயரை பிரதமர் மோடி, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் அம்பேத்கரின் சிந்தனைகளில் தீர்வு அடங்கியுள்ளது. நாடாளுமன்றத்திலும் அம்பேத்கரின் கொள்கைகள் பேசப்படுகின்றன. ஆனால் அவரது கொள்கைகளை அமல்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நமது நாட்டின் சட்டம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் சமீபகாலமாக சிலருக்கு மட்டுமே சட்ட பாதுகாப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. சமத்துவம், சுதந்திரம், கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பு வந்துள்ளது. சமூக-பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு அம்பேத்கர் சிறப்பு அந்தஸ்து வழங்கினார். அந்த சிறப்பு அந்தஸ்துக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அதை நீக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

கூட்டாட்சி தத்துவத்தை உடைக்கும் நோக்கத்தில் ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் கொள்கையை அனுசரித்தனர். அதே கொள்கையை இப்போது ஆளும் பா.ஜனதா அரசு பின்பற்றுகிறது. சமுதாயத்தின் முழுமையான நலனை காப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. சாதி, மதம், மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள். இதற்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை தேசத்துரோகிகள் என்று கூறுகிறார்கள். இந்த சாதி நடைமுறையை அப்படியே இருக்க வேண்டும் என்று பா.ஜனதா நினைக்கிறது. சமுதாயத்தை உடைப்பவர்கள் தேசத்துரோகிகள்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
Tags:    

Similar News