உள்ளூர் செய்திகள்
கைது

திருவண்ணமலை அருகே தங்கையை எரித்துக் கொன்ற பெண் கைது

Published On 2022-01-20 06:04 GMT   |   Update On 2022-01-20 06:04 GMT
திருவண்ணமலை அருகே தங்கையை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் பாலானந்தல் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு இந்திரா காந்தி, தேவகி (வயது 51) என்று 2 மனைவிகள் இருந்தனர்.

இவர்கள் இருவரும் அக்காள், தங்கை ஆவார்கள்.பச்சையப்பன் சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தேவகிக்கு குழந்தை இல்லை. இந்திராகாந்திக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தேவகி அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது அவர் எரிந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டு இருந்ததார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் தேவகி உடலில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்துள்ளனர். இருப்பினும் தேவகி உடல் பாதி எரிந்த நிலையில் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் தேவகி வசித்த பகுதி கலசபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் இதுதொடர்பாக கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தேவகியின் சகோதரி இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் மணிகண்டனிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.அப்போது இந்திரா காந்தி" நான் தான் தேவகி மீது மண்ணெண்னை ஊற்றி எரித்துக் கொலை செய்தேன் "என்று தெரிவித்தார். எதற்காக தேவகியை கொலை செய்தார்? என்று கேட்டபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பெரும் தொல்லையாக இருப்பதாக கருதி கொலை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் இந்திராகாந்தியை கைது செய்தனர்.

மேலும் சொத்து பிரச்சினைகள் காரணமாக தேவகி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.இந்த சம்பவம் மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News