செய்திகள்
கோப்புப்படம்

மதுரையில் நாளை 1,150 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

Published On 2021-09-18 11:02 GMT   |   Update On 2021-09-18 11:02 GMT
மதுரையில் நாளை 1,150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

தினமும் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்களில் சராசரியாக 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி சென்றடைய அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது.

கடந்த 12-ந் தேதி முதல் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் ஒரே நாளில் தடுப்பு செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.

இதுவரை மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 14.60 லட்சமாக உயர்ந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், எளிதாக பொதுமக்கள் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வசதியாக வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு நோய்த்தொற்றை தடுக்க சுகாதாரத்துறையினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அதன்படி 2-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நாளை (19-ந் தேதி) நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் மதுரை நகர பகுதிகளில் 250 இடங்கள், புறநகர் பகுதிகளில் 900 இடங்கள் மொத்தம் 1,150 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பு செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

இதற்கு போதுமான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் நாளை நடைபெறும் சிறப்பு முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது‌. நேற்று 20 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். எனவே கொரோனா 3-வது அலை மதுரை மாவட்டத்தில் ஏற்படாமல் தவிர்க்க அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News