உள்ளூர் செய்திகள்
கோவில் இடிக்கப்படும் காட்சி.

அடையாறு ஆற்றுகரையோரம் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் இடிப்பு

Published On 2022-01-11 09:37 GMT   |   Update On 2022-01-11 09:37 GMT
முடிச்சூரில் அடையாறு ஆற்றுகரையோரம் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கோபுரத்தின் உச்சியில் ஏறி, கோவிலை இடிக்க கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
தாம்பரம்:

தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோயில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் கோவிலை இடிக்க முடிவு செய்தனர்.

இது தொடர்பான கோயில் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் வழங்கினர். இதற்கு நிர்வாகிகள் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் கோவிலை இடிக்க பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவில் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில பக்தர்கள் கோபுரத்தின் உச்சியில் ஏறி, கோயிலை இடிக்க கூடாது என்று போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குன்றத்தூர் வட்டாட்சியர் பிரியா தலைமையில் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்காத பக்தர்கள் வட்டாட்சியருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் பொக்லைன் மூலம் ஆஞ்சநேயர் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது. கோயில் முழுவதும் இடிக்கப்பட்டது.
Tags:    

Similar News