செய்திகள்
ஊட்டி அருகே உள்ள காமராஜ் சாகர் அணையை காணலாம்

காமராஜ் சாகர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பு

Published On 2021-05-01 10:21 GMT   |   Update On 2021-05-01 10:21 GMT
ஊட்டி அருகே காமராஜ் சாகர் அணையில் இருந்து மின் உற்பத்தி செய்வதற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் மின் வாரியத்தின் கீழ் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணைகள் உள்ளது. அணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, மின் நிலையங்களில் மின் உற்பத்தி நடக்கிறது. இதன் மூலம் தினமும் 248.47 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ் முக்குருத்தி, பைக்காரா, சிங்காரா, மாயார், மரவகண்டி ஆகிய மின் நிலையங்கள் உள்ளன. பருவமழை காலங்களில் வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.

பின்னர் மின் உற்பத்தி செய்வதற்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கோடை மழை போதிய அளவில் பெய்யாததாலும், மின் உற்பத்திக்காக அணைகளில் தண்ணீர் அதிகளவு பயன்படுத்தப்பட்டதாலும் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால் மசினகுடி, சிங்காரா மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து மின் உற்பத்தி செய்வதற்காக காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த அணையில் இருந்து செல்லும் தண்ணீர் கிளன்மார்கன், அணையில் தேக்கி வைக்கப்பட்டு, மசினகுடி சிங்காரா மின் நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி மின்வாரிய அணைகளில் தண்ணீர் இருப்பு 40 சதவீதமாக இருந்தது. அணைகளில் உள்ள தண்ணீர் மின் உற்பத்திக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் நீர்மட்டம் குறைந்து உள்ளது. தற்போது காமராஜ் சாகர் அணையில் 2 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, இதன் மூலம் மின் உற்பத்தி தடை இல்லாமல் மேற்கொள்ளப்படுகிறது என்றார். கோடை காலம் என்பதால் சமவெளி பகுதிகளில் மின்சார தேவை அதிகரித்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு மின்உற்பத்தி நடக்கிறது.
Tags:    

Similar News