செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 872 பேருக்கு கொரோனா

Published On 2021-04-29 08:31 GMT   |   Update On 2021-04-29 08:31 GMT
நெல்லை மாவட்டத்தில் அம்பை, நாங்குநேரி, பாளை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மகாதேவி, களக்காடு என மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையால் தினசரி பாதிப்பு நாள் தோறும் உயர்ந்து வருகிறது.

கடந்த 1-ந்தேதி நிலவரப்படி ஒரு நாள் பாதிப்பு 60 ஆக இருந்தது. அதன் பிறகு தொற்று பரவல் வேகம் எடுத்தது.

குறிப்பாக மாநகர பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து வேகமாக பரவிய வைரசால் கடந்த 23-ந்தேதி பாதிப்பு முதல் முறையாக 500-ஐ கடந்தது.

அதன் பிறகும், அதிவேகமாக பரவிய கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 27-ந் தேதி 680 பேரும், நேற்று 714 பேரும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதிய உச்சமாக இன்று 872 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகரில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் 465 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் அம்பை, நாங்குநேரி, பாளை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மகாதேவி, களக்காடு என மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் மாநகர் பகுதியில் ஒரு டாக்டர், மின்வாரிய ஊழியர்கள் 2 பேர், பெண் போலீஸ் ஒருவர், மணிமுத்தாறு காவலர் குடியிருப்பில் தாய், மகள், மகன், களக்காடு பெண்கள் விடுதியில் 3 பேருக்கும், மேலப்பாளையம் மண்டலத்தில் ஒரு பகுதியில் 5 சிறுவர்களுக்கும், உழவர் சந்தையில் 13 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பு மற்றும் செட்டிகுளத்தில் 45 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மொத்த பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது.

இதுவரை 18,832 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இதற்கிடையே பாளை ஜெயில் அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் பாளை மத்திய சிறையில் கணக்காளராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.

Tags:    

Similar News