செய்திகள்
பிரதமர் மோடி

‘தற்சார்பு இந்தியா’ பிரசாரம் உலக வளர்ச்சிக்கும் உதவும் - பிரதமர் மோடி பேச்சு

Published On 2020-12-25 00:23 GMT   |   Update On 2020-12-25 00:23 GMT
தற்சார்பு இந்தியா என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்குமான பிரசாரம் என்று பிரதமர் மோடி கூறினார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம், கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது ஆகும். அதன் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:-

விஸ்வபாரதி பல்கலைக்கழகம், சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தியது.

அதே காலகட்டத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்ற முக்கிய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்தியாவின் அறிவு தாகத்துக்கு அவை உத்வேகம் அளித்தன.

இந்தியாவில் நடப்பதில் இருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் கல்வியும், அறிவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தாகூர் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கினார். அதே சிந்தனையுடன் அனைவருக்கும் நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்வோம்.

இப்போது நிறைய பேர் நல்ல கல்வி கற்று வருகிறார்கள். நாம் வலிமையான, அறிவார்ந்த நாட்டை உருவாக்க பாடுபட வேண்டும். அது, தற்சார்பு இந்தியாவாக இருக்க வேண்டும். அதை உருவாக்க உள்நாட்டு உற்பத்தி பொருட்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்கான தாகூரின் பார்வைதான், மத்திய அரசின் ‘தற்சார்பு இந்தியா’ பிரசாரத்தின் சாராம்சம் ஆகும். தற்சார்பு இந்தியாவானது, இந்தியாவுக்கு வளத்தையும், அதிகாரத்தையும் அளிக்கும். அதன்மூலம் உலகத்துக்கே வளம் சேர்க்க உதவும்.

தற்போது, சர்வதேச சோலார் கூட்டணி மூலமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகின் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது. பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் இலக்குகளை எட்ட வேகமாக செயல்படும் ஒரே நாடு இந்தியா ஆகும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News