செய்திகள்
அமித் ஷா

தேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்- பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா உத்தரவு

Published On 2020-11-22 07:00 GMT   |   Update On 2020-11-22 07:00 GMT
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் பணிகளை உடனே தொடங்குங்கள் என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

மத்திய உள்துறைமந்திரி யும் பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும், கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையிலும் அவரது பயணத்திட்டம் அமைந்தது.

நேற்று மாலையில் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு நிகழ்ச்சியை முடித்து கொண்டு அடையாறு எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பினார்.

அங்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜனதாவுடனான கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பா.ஜனதா மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மேடையில் அமித்ஷா, மேலிட பொறுப்பாளர்கள், சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி, சந்தோஷ், மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், நடிகர் ராதாரவி, தி.மு.க.வில் இருந்து நேற்று பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆலோசனை வழங்குமாறு நிர்வாகிகளிடம் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

பெரும்பாலான நிர்வாகிகள் தமிழிலேயே பேசினார்கள். அதை எச்.ராஜா இந்தியில் மொழி பெயர்த்து அமித்ஷாவிடம் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளி மட்டும் இந்தியில் பேசினார்.

நிர்வாகிகள் பேசும் போது கட்சி வளர்ச்சிக்காக தனியாக தொலைக்காட்சி சேனல் தொடங்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டங்கள் ஏராளமாக செயல்படுத்தப்படுகிறது.

மாநில அரசு மூலம் செயல்படுத்தும் போது மத்திய அரசு திட்டமாக மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்று தெரிவித்தனர்.

அனைவரது கருத்துக்களையும் கேட்ட பிறகு அமித்ஷா பேசினார்.

நாடு முழுவதும் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் கட்சியின் மீது நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் வளர்க்க முடியும்.

தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்றால் இதுதான் முக்கியம்.

காங்கிரஸ் ஆட்சி நீண்ட காலம் இருந்ததற்கு காரணம் நாடு முழுவதும் கட்சியின் செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்கள்.

அதனால்தான் வடக்கே தோற்றால் தெற்கே கை கொடுக்கும். தெற்கே தோற்றால் வடக்கே கைகொடுக்கும். அவர்களால் தொடர்ந்து ஆட்சிக்கு வர முடிந்தது.

நமது கொள்கைகளும், செயல் திட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கானது. அதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். நாட்டுப் பற்றையும், நல்ல சிந்தனைகளையும் மக்கள் மத்தியில் வளருங்கள்.

சேனல் தொடங்குவது, உலக அரசியல் பேசுவதால் கட்சி வளராது. பூத் கமிட்டியை பலப்படுத்துங்கள். உங்கள் பகுதியில் கட்சியை பலப்படுத்துங்கள்.

வட கிழக்கு மாநிலங்களில் பூஜ்யம் மற்றும் ஒரு சதவீதத்துக்கு கீழ்தான் பா.ஜனதா செல்வாக்கு இருந்தது. ஆனால் இப் போது திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றும் அளவு கட்சி வளர்ந்துள்ளது. மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களிலும் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது.

கட்சியை வலுப்படுத்தியதால் பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வலுவாக இருந்த பிராந்திய கட்சிகளை பின்னுக்கு தள்ளி பா.ஜனதா வளர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம் முதல் கேரளா வரை கட்சி பலவீனமாக இருக்கிறது. இந்த மாநிலங்களிலும் கட்சி அமைப்பை பலப்படுத்தினால் சாதிக்க முடியும்.

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தலை சந்திக்க போகிறார்கள். அதற்கு ‘பூத்’ மட்டத்தில் கட்சியை வலுப்படுத்தி பணிகளை தீவிரப்படுத்துங்கள். அடுத்த 5 ஆண்டுகளில் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார். முன்னதாக பொது செயலாளர் கரு.நாகராஜன் வரவேற்று பேசினார்.

Tags:    

Similar News