செய்திகள்
வைகோ

வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Published On 2019-09-12 06:03 GMT   |   Update On 2019-09-12 06:03 GMT
பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்த பிறகு, அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றளவும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முழுவதுமாக திரும்பவில்லை.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.



அவர் தனது மனுவில், “சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள அண்ணா மாநாட்டுக்காக பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரவேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்ற நிதிபதி ரமணா அமர்வில் வைகோ தரப்பில் இன்று முறையிடப்பட்டது. ஆனால் வைகோவின் மனுவை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மனுவை எப்போது விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News