வழிபாடு
தேவநாதசுவாமி

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல்பத்து உற்சவம் 3-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-12-31 08:11 GMT   |   Update On 2021-12-31 08:11 GMT
இந்த பகல் பத்து உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பகல் பத்து உற்சவம் வருகிற 12-ந்தேதி முடிவடைகிறது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் வருகிற 3-ந்தேதி பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது.

இதைதொடர்ந்து அன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் பெருமாள், தேசிகர் சுவாமியை பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு சென்று அங்கு பெருமாள், தேசிகர், ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சுவாமிக்கு சாற்றுமுறை நடக்கிறது.

இந்த பகல் பத்து உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பகல் பத்து உற்சவம் வருகிற 12-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து 13-ந்தேதி வைகுண்டஏகாதசி விழாவை யொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிகாலையில் பரமபத வாசலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மார்கழி மாதம் ஏகாதசி என்பதால் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தேவநாதசுவாமி அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து கோவில் உட்புறத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News