செய்திகள்
கைதான 9 பேர்

பிரபல நகைக்கடை அதிபரை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு - 9 பேர் கைது

Published On 2019-11-14 08:08 GMT   |   Update On 2019-11-14 08:08 GMT
தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடை அதிபரை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறித்த கும்பலை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருபவர் சிவ அருள்துரை. இவரது கடைக்கு கடந்த 3-ந் தேதி சென்ற ஒரு கும்பல் 3 பவுன் செயினை வாங்கி பின்னர் நகையில் ஒரு பவுடரை தடவி இது போலி நகை என்று கூறி நகைக்கடை உரிமையாளரான சிவ அருள்துரையை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டினர்.

போலி நகைகளை விற்பனை செய்வதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு விடுவோம் என்று கூறிய அந்த கும்பல் ரூ.15 லட்சம் ரூபாயை மிரட்டி வாங்கியது.

இதையடுத்து நேற்று மாலை 5 மணி அளவில் இதே கும்பல் மீண்டும் கடைக்கு சென்று சிவ அருள்துரையை சந்தித்தது. அப்போது, நீங்கள் கொடுத்த பணம் போதாது மேலும் 1 கோடி ரூபாய் வேண்டும் என்று மிரட்டல் விடுத்தது.

அந்த கும்பலில் இருந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார்.

இதுபற்றி சிவ அருள்துரை ரகசியமாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாம்பலம் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 15 பேர் கொண்ட கும்பல் அங்கு இருந்தது. போலீஸ் வருவதை தெரிந்ததும் அதில் பலர் தப்பி ஓடிவிட்டனர். 9 பேர் மட்டும் போலீசில் சிக்கினர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த கும்பலை சேர்ந்த தனசேகர் என்பவரிடம் போலியான காவலர் அடையாள அட்டையும், 4 பத்திரிகையாளர் அட்டையும் இருந்தது. ஜீவா என்பவர் துப்பாக்கி வைத்திருந்தார். இவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனசேகரன் திருவேற்காட்டை சேர்ந்தவர். ஜீவா வடபழனியை சேர்ந்தவர். இவர் அரசியல் கட்சி ஒன்றில் உள்ளார்.

புதுப்பேட்டையை சேர்ந்த செய்யது அபுதாகிர், அமானுல்லா, எண்ணூரை சேர்ந்த ஜெகதீசன், கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த முருகன், திருவல்லிக்கேணியை சேர்ந்த திருமால், பல்லாவரத்தை சேர்ந்த தண்டபாணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.



இவர்களிடம் இருந்து 2 கார்களும், 2 துப்பாக்கிகளும், 2 கத்திகளும், பெரிய இரும்பு கம்பியும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் பரபரப்பான தி.நகர் பகுதியில் பிரபலமான நகைக்கடை அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.15 லட்சம் பணம் பறிக்கப்பட்டதும், துப்பாக்கி முனையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதிகளில் கடை வைத்துள்ள மற்ற தொழில் அதிபர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News