செய்திகள்
கோப்பு படம்

பெரம்பலூரில் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு

Published On 2019-10-19 14:56 GMT   |   Update On 2019-10-19 14:56 GMT
பெரம்பலூரில் “குழந்தை கடத்தல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” என்கின்ற நாடு தழுவிய இயக்கத்தின் சார்பில் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
பெரம்பலூர்:

டெல்லி கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீட்ஸ் அமைப்பு சார்பில் “குழந்தை கடத்தல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” என்கின்ற நாடு தழுவிய இயக்கத்தின் சார்பில் குழந்தை கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கினை நடத்தி வருகிறது.அதன்படி பெரம்பலூரில் நடந்த மாவட்ட அளவிலான குழந்தை பாதுகாப்பு கருத்தரங்கிற்கு இந்த அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளருமான முகமது உசேன் தலைமை வகித்தார்.

குழந்தைகளில் கடத்தல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்கின்ற இயக்கத்தின் தமிழ் மாநில தலைவர் ராஜகோபால் தலைமை வகித்து பேசுகையில், பெண்களையும், குழந்தைகளையும் இரு கண்களாக போற்றும் நம் சமுதாயத்தில் குழந்தைகள் மீதான பாதிப்புகள், வன்முறைகள், குழந்தை தொழிலாளர் முறை, மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது.

“குழந்தைகளில் கடத்தல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” என்கின்ற நாடு தழுவிய இந்த இயக்கம் நடைபெற முக்கிய காரணம் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு ஏதிரான வன்முறையானது தமிழகத்தில் மட்டும் (2012-16) 175 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. இது தேசிய அளவில் 3 சதவிகிதம் ஆகவும் நாட்டில் தமிழகம் 15-வது இடத்தில் உள்ளது. 2022 ஆண்டுக்குள் இந்தியாவை குழந்தைகளில் கடத்தல் இல்லாத நாடாக மாற்றும் ஒரு முயற்சி தான் இது என்றார்.

பின்னர் நடந்த பொது விவாதத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரேவதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அருள்செல்வி , முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாலிங்கம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைகுழு அலுவலர் வெள்ளைச்சாமி, வக்கீல் இலியாஸ் முகமது, ஸ்டாலின், ராதா உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் குழந்தை கடத்தல், பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல், வன்புணர்ச்சிக்கு எதிரான நடவடிக்கை, அதனை தடுத்தல் , சட்டரீதியான பாதுகாப்பு அளித்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

முடிவில் மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய “ மாவட்ட குழந்தை நேய குழு” ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக தோழி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதா வரவேற்றார். முடிவில் இந்தோ அறக் கட்டளையின் ஒருங்கிணைபாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.
Tags:    

Similar News