உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வரி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்-திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

Published On 2021-12-06 06:48 GMT   |   Update On 2021-12-06 06:48 GMT
கொரோனாவுக்குப்பின் நிறுவனங்களின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. நூல் உட்பட அனைத்து மூலப்பொருட்கள், ஜாப்ஒர்க் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.
திருப்பூர்:

ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் செலுத்தும் வரியை மத்திய அரசு ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., என்கிற திட்டத்தில் திரும்ப வழங்குகிறது. வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஆடைக்கான தொகை பெறப்பட்டபின்  ஏற்றுமதியாளர்கள்  சுங்க வரித்துறையில் இச்சலுகைக்காக விண்ணப்பிக்கின்றனர்.

மற்ற சலுகைகள்போன்று அல்லாமல்  ஆர்.ஓ. எஸ்.சி.டி.எல்., திட்டத்தில் ஆடை மதிப்பில் 4 முதல் 6 சதவீத தொகைக்கான மாற்றத்தக்க சான்றாக வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஏற்றுமதி நிறுவனங்கள்  பொருட்கள் இறக்குமதிக்கான வரியை கழித்துக்கொள்ளலாம்.

பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசின் இந்த திட்டம் உறுதுணையாக உள்ளது.நடப்பு ஆண்டு திட்ட சலுகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரை பல கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை நிலுவையில் உள்ளது. இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்று மதியாளர்கள் சிலர் கூறியதாவது:-

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினருக்கு கடந்த ஜனவரி முதல் இம்மாதம் வரை ரூ. 1,300 கோடி  மதிப்பிலான ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில்  தற்போது  சான்றுகளை விடுவித்து வருகின்றனர்.

கொரோனாவுக்குப்பின் நிறுவனங்களின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. நூல் உட்பட அனைத்து மூலப்பொருட்கள், ஜாப்ஒர்க் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. எனவே தொழில் நிலைமை கருதி மத்திய அரசு  ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., உட்பட நிலுவையில் உள்ள அனைத்து சலுகைகளையும் விரைந்து வழங்கி ஏற்றுமதியாளர்களுக்கு கைகொடுக்கவேண்டும் என்றனர்.
Tags:    

Similar News