இந்தியா
போராட்டம் காரணமாக ரயில்வே தேர்வுகள் தள்ளி வைப்பு

போராட்டம் எதிரொலி - ரயில்வே தேர்வுகள் நிறுத்தி வைப்பு

Published On 2022-01-26 23:58 GMT   |   Update On 2022-01-26 23:58 GMT
அடுத்த மாதம் 15 மற்றும் 23-ந்தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ரயில்வேத் துறையில் நிலை 1 மற்றும் தொழில்நுட்பம் சராத பல்வேறு வகை  பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது.35 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்த பணியிடங்களுக்கான தேர்வுகளை பல்லாயிரக் கணக்கானோர் எழுதினர். ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வகளுக்கான முடிவுகள் கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்ட தேர்வு அடுத்த மாதம் 15 மற்றும் 23-ந்தேதிகளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. முதல் நிலை தேர்வு எழுதியவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களை ஏமாற்றுவதற்கு சமம் எனவும், குறைந்த கல்வித்தகுதி கொண்ட பணியிடங்களுக்கு கூட அதிக கல்வித்தகுதி கொண்டவர்களை தேர்வு செய்யும் முயற்சி எனவும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி  பீகார் மாநிலம் முழுவதும் தேர்வர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ரயில் பெட்டிக்கு தீ வைப்பு உள்பட ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.  இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் நிலைமையையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் 2-ம் கட்ட தேர்வுகளை நிறுத்தி வைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் 15 மற்றும் 23ந் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன.  இதைப்போல தேர்வர்களின் சந்தேகங்கள், கவலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக உயர்மட்ட கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. 

தேர்வர்கள் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை பிப்ரவரி 16-ந்தேதிக்கு முன் rrbcommittee@railnet.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த கமிட்டிக்கு அனுப்பி வைக்க கேட்கப்பட்டு உள்ளனர்.   முதற்கட்ட தேர்வு முடிவுகள், 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட விதம் போன்றவற்றையும் இந்த கமிட்டி ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News