செய்திகள்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை காணலாம்

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2021-11-30 06:32 GMT   |   Update On 2021-11-30 06:32 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்ளில் தொடர்ந்து பருவமழை அதிகளவில் பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள், வாழைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் விட்டு விட்டு இன்று காலை வரை மழை பெய்தது.

அதிகபட்சமாக பாபநாசம் அணைப்பகுதியில் 91 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 84 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நெல்லை, பாளை, சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம் உள்பட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழையும், கனமழையும் மாறி மாறி பெய்தது.

இன்று பகலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக, இதுவரை நிரம்பாத மணிமுத்தாறு அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. விநாடிக்கு 3,683 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணையில் இருந்து தண்ணீர் எதுவும் திறக்கப்படவில்லை. காட்டாற்று வெள்ளம் மட்டுமே மணிமுத்தாறு ஆற்றில் செல்கிறது. இதனால் நேற்று 107.55 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து இன்று காலை 110.90 அடியானது.

மணிமுத்தாறு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 118 அடியாகும். தற்போது அணை திறக்கப்படாததால் இன்று மாலையே அது 112 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. எனவே விரைவில் மணிமுத்தாறு அணையும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பும் நிலையை அடைந்ததால், அணை பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை பாதுகாப்பு கருதி ஆற்றில் 8,449 கனஅடி தண்ணீரும், அனைத்து கால்வாயில் முழுஅளவிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர்மட்டம் நேற்றைவிட சற்று குறைந்து இன்று பாபநாசம் அணை நீர்மட்டம் 138 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.87 அடியாகவும் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.

இதனால் நெல்லை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை சுமார் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெள்ளமாக செல்கிறது. மேலும் தாமிரபரணியின் கிளைநதிகளான கடனாநதி, சிற்றாறு ஆகியவற்றின் வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.

இதனால் மருதூர் அணைக்கட்டை கடந்து இன்று சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது.

இந்த தண்ணீர் ஸ்ரீவைகுண்டம், முக்காணி தடுப்பணைகளை கடந்து வீணாக கடலில் சென்று கலக்கிறது.

பெரும்பாலான தாமிரபரணி கால்வாய்களிலும் தண்ணீர் வெள்ளமாக செல்வதால் பல ஏக்கர் விளைநிலங்களும், தண்ணீரில் மூழ்கி உள்ளன. சில இடங்களில் தரைப்பாலங்களை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.

நெல்லை குறுக்குத்துரை முருகன் கோவில் முற்றிலும் மூழ்கி, கோபுரமும், மண்டப மேல் பகுதி மட்டுமே தெரிகிறது.

பாபநாசம் படித்துறை உள்பட அனைத்து படித்துறைகளும் மூழ்கி உள்ளன. ஆற்றுக்கு பொதுமக்கள் யாரும் குளிக்க செல்லவேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக டவுன் கோடீஸ்வரன்நகர் அருகே உள்ள நூறாண்டு பழமையான ஆலமரம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் குன்னத்தூர் வழியாக மாற்றுப்பாதையில் விடப்பட்டன. சம்பவ இடத்திற்கு பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்தையா தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர் சென்று சுமார் 3 மணி நேரம் போராடி மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர்.

தச்சநல்லூர் மருத்துவர் தெருவில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவரது மனைவி வீரகுமாரி (வயது 70) என்பவர் வசித்து வந்த பழமையான வீட்டின் ஒரு பக்க சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மூதாட்டி வீரகுமாரி வெளியே வந்ததால் காயமின்றி உயிர் தப்பி உள்ளார்.

மழை அளவு (மில்லிமீட்டரில்)

பாபநாசம் -91, மணிமுத்தாறு-84, அம்பை-83, கன்னடியன்கால்வாய்-81.4, ஆய்க்குடி-76, சேர்வலாறு-76, குண்டாறு-67, சேரன் மகாதேவி-58, தென்காசி-56.4, களக்காடு-53.2, நாங்குநேரி-53, கொடுமுடியாறு-50, கடனாநதி-45, அடவிநயினார்-45, செங்கோட்டை-44, மூலக்கரைப்பட்டி-41, சிவகிரி-40, கருப்பாநதி-35, பாளை-33, ராதாபுரம்-30, நம்பியாறு-30, சங்கரன்கோவில்-26, நெல்லை-23.6, ராமநதி-15.
Tags:    

Similar News