செய்திகள்
கோப்புபடம்

நாளையும், நாளை மறுநாளும் 7 மாவட்டங்களில் அதிக வெப்பம் இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

Published On 2021-04-04 08:24 GMT   |   Update On 2021-04-04 08:24 GMT
தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 7 மாவட்டங்களில் அதிக வெப்பம் இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.

சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இதனால் 106 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது. இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசியது.

இந்தநிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகும். 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக்கூடும்.


எனவே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை வெளியில் தலைகாட்டுவதை தவிர்க்கலாம். விவசாயிகளும் இந்த நேரத்தில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும்.

இதேபோன்று வடக்கு கடலோர மாவட்டங்களிலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படும். அதேநேரத்தில் கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது.

தெற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளில் இருந்து தமிழக பகுதிகளை நோக்கி காற்று வீசுவதால், வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். இன்று திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவியது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதிய வேளையில் வேட்பாளர்கள் ஊர்வலம் செல்வதை தவிர்க்கலாம்.

வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் சுழற்சி காரணமாக வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்குவானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 38 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் விருதுநகர் வெம்பக்கோட்டையில் 3 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News