உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அன்பான அழைப்பை அரசியலாக்க வேண்டாம்: கவர்னர் தமிழிசை வேண்டுகோள்

Published On 2022-04-17 05:54 GMT   |   Update On 2022-04-17 05:54 GMT
அன்பான அழைப்பை அரசியலாக்க வேண்டாம் என கவர்னர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் மாளிகையில் தமிழ் புத்தாண்டையொட்டி, கவர்னர் தமிழிசை சித்திரை முழு நிலவு விருந்து தேனீர் விருந்தளித்தார்.

இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். விருந்தை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் புறக்கணித்தனர். இதுகுறித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

 தமிழகத்தில் கூட்டாஞ்சோறு உண்ணும் பழக்கம் இருந்தது. இதனால்தான் தமிழக பாரம்பரிய உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

தமிழர்கள் பெருமை எல்லா வகையிலும் நிலை நிறுத்த வேண்டும் என்பதே விருந்தின் நோக்கம். இதில் அரசியலை கலப்பது பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. ஒரு சகோதரியாக விருந்துக்கு அழைப்பு விடுத்தேன். நான் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதாக சிலர் போராடுகின்றனர்.

முதல்-அமைச்சர் சுதந்திரமாக செயல்படுகிறார். எல்லாவற்றிலும் அரசியலை புகுத்தினால் யாரும் நல்லுறவு, நட்புணர்வோடு இருக்க முடியாது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அன்பான அழைப்பை அரசியலாக்க வேண்டாம். 

அதிகாரத்தை கையில் எடுத்துவிட்டேன் என ஆதாரம் இல்லாமல் கூறுகின்றனர். இதை அவர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கவர்னர் விருந்தில் பங்கேற்காதது குறித்து எதிர்கட்சித்தலைவர் சிவா  எம்.எல்.ஏ.வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 புதுவையில் என்.ஆர்.காங். பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசும், அரசு நிர்வாகமும் பவுர்ணமியாக இல்லை. தேய்பிறையாகத்தான் உள்ளது. 

தை முதல் தேதிதான் தமிழ் புத்தாண்டு, சித்திரை இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் போல் பிரதமர், மத்திய அமை-ச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை வைக்கின்றார். அவர் அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார். 

அவரது கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப்படவில்லை. மக்கள் நல பிரச்சினைகளை சட்ட-சபையில் விவாதிக்க தடையாக இருந்து பா.ஜனதா கொள்கைகளை மட்டும் புதுவையில் அமல்படுத்தும் வகையில் செயல்படுகிறார். பிரதமர், உள்துறை, நிதி அமைச்சர்களால்  உறுதி அளிக்கப்பட்ட மாநில அந்தஸ்து, கூடுதல் நிதியுதவி, கடன் தள்ளுபடி எதுவும் நிறைவேற்றவில்லை. 

புதுவையின் வளர்ச்சியும், மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் கவர்னர் விருந்தை புறக்கணித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News