செய்திகள்
பிந்து

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- பிந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2019-12-03 05:03 GMT   |   Update On 2019-12-03 05:03 GMT
சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மிளகாய் பொடி வீசப்பட்ட பிந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து அனைத்து பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளனர். அதேசமயம் 2018-ம் ஆண்டு அனைத்து பெண்களும் சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்ற உத்தரவுக்கு கோர்ட்டு தடை விதிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறந்து உள்ளது. இதையொட்டி சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக புனேயை சேர்ந்த பெண் உரிமை இயக்கத்தை சேர்ந்த திருப்திதேசாய் தலைமையில் 5 இளம்பெண்கள் கொச்சிக்கு வந்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக கடந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்ற பிந்துவும் வந்திருந்தார்.

கொச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் பிந்து நின்றுகொண்டு இருந்தபோது அவர் மீது இந்து அமைப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக திருப்திதேசாயும் திருப்பி அனுப்பப்பட்டார்.



இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பிந்து சார்பில் கேரள அரசு தலைமைச் செயலாளர் மற்றும் போலீசாருக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடவேண்டும். சபரிமலை செல்லும் பெண்களின் வயதை கேரள போலீசார் ஆய்வு செய்கிறார்கள். இதற்கு தடைவிதிக்க வேண்டும்.

சபரிமலை செல்லும் பெண்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதேசமயம் பெண்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கொச்சி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு சென்ற போது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது முடிவு எடுப்பதற்காக இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News