செய்திகள்

கூடலூர், பந்தலூரில் பலத்த மழை: மின் வினியோகம் பாதிப்பு

Published On 2019-05-13 17:06 GMT   |   Update On 2019-05-13 17:06 GMT
கூடலூர் மற்றும் பந்தலூரில் பலத்த மழை பெய்தது. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
கூடலூர்:

கூடலூரில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏற்பட்ட வறட்சியால், வனப்பகுதிகள் பசுமையை இழந்தன. நீர்நிலைகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. ஆனால் கடந்த சில நாட்களாக மாலை அல்லது இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளன. மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இருப்பினும் பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியதால், வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூரில் பலத்த மழை பெய்தது. ஆனால் நேற்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. இதற்கிடையில் மதியம் 12.45 மணியளவில் கூடலூர், பந்தலூர் தாலுகா முழுவதும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து முதுமலை வனப்பகுதி வழியாக கூடலூருக்கு வரும் உயர் கோபுர மின் அழுத்த கம்பிகள் பலத்த மழை காரணமாக பல இடங்களில் அறுந்து விழுந்துள்ளன. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். கோடை மழை பெய்தாலும் கூடலூர் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று பந்தலூர், மேங்கோரேஞ்சு, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, உப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் கொளப்பள்ளியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையிலும், பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையிலும், கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள மேங்கோரேஞ்சு பகுதியிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார துறையினர் விரைந்து வந்து மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஆயிஷா என்பவரது வீட்டில் மின்னல் தாக்கி மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. 
Tags:    

Similar News