செய்திகள்
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஒருவர் பலி

Published On 2021-04-05 03:34 GMT   |   Update On 2021-04-05 10:45 GMT
சிவகாசி அருகே துரைசாமிபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான்பட்டி எஸ்.துரைச்சாமிபுரத்தில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஆலையில் உள்ள அறையில் சமத்துவபுரம் ரிசர்வ் லைனைச் சேர்ந்த தர்ம லிங்கம் (வயது45), கல்லம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகன் (35), துரைச் சாமிபுரத்தைச் சேர்ந்த கந்தசாமி (40) ஆகியோர் பட்டாசு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மருந்து உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அறையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது பரவி வெடிக்க தொடங்கியது. பயங்கர சத்தத்துடன் வெடித்ததை தொடர்ந்து அறையில் இருந்த 3 பேரும் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதில் தர்மலிங்கம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். வெடி விபத்தில் ஆலையின் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. 2 அறைகளின் சுவர்கள் சேதம் அடைந்தன.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகன், கந்தசாமியை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிவிபத்து தொடர்பாக வருவாய்த் துறையினர் சம்பவ இடம் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்ற சிவகாசியில் கடந்த 3 மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

மேலும் பலர் தீக்காயம் அடைந்து உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்துள்ளது. தொடர் வெடி விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பட்டாசு தொழிலாளர்களிடையே அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News