செய்திகள்
தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

234 தொகுதியிலும் மக்கள் ஆர்வம் - தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Published On 2021-04-06 05:46 GMT   |   Update On 2021-04-06 05:55 GMT
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு தொடங்கியதும் சில வாக்குச்சாவடிகளில் ஓட்டு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாற்று எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்தது.

சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சட்டசபை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது.

மேற்குவங்காளத்தில் 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6-ந் தேதி செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் வாக்குப்பதிவு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. மேற்குவங்காளத்தில் 3-வது கட்ட தேர்தலும், அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3-ம் பாலினத்தவர் 7192 பேர் உள்ளனர்.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றொரு அணியாகவும் நின்றன. அ.தி.மு.க. அணியில் பா.ம.க., பா.ஜனதா, தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த கூட்டணியில் அ.தி.மு.க. 179 தொகுதிகளிலும், பா.ம.க. 23 தொகுதிகளிலும், பா.ஜனதா 20 தொகுதிகளிலும், த.மா.கா. 6 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதில் தி.மு.க. 173 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூ., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இவர்கள் தவிர டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க., சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனி அணியாக நின்றன. மொத்தம் 3,998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர்.

வாக்காளர்கள் ஓட்டு அளிப்பதற்காக மாநிலம் முழுவதும் 88ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாக குறைவான வாக்குச்சாவடிகளே அமைக்கப்படும். ஆனால் இப்போது கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரம் வாக்கு எந்திரங்களும், 91 ஆயிரத்து 180 கட்டுப்பாட்டு எந்திரமும், 91 ஆயிரத்து 190 விவிபாட் எந்திரமும் பயன்படுத்தப்பட்டன.

வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் நேற்றே கொண்டு செல்லப்பட்டு இரவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

இன்று காலை 5 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடி அதிகாரிகள், ஊழியர்கள் மையத்துக்கு வந்து தங்களது இருக்கையில் அமர்ந்தனர். 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி பார்க்கப்பட்டது.

சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் வந்துவிட்டனர். முதல் ஆளாக ஓட்டுப்பதிவு செய்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்கள் வந்திருந்ததை காணமுடிந்தது.

குறிப்பாக வயதானவர்கள், இளைஞர்கள் காலையிலேயே வந்து காத்து இருந்தார்கள். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் கியூவில் நின்று வாக்குச்சாவடிக்குள் சென்றார்கள்.

கொரோனா பிரச்சினை காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி முககவசம் அணிந்து இருக்கிறார்களா என உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். அவ்வாறு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே முககவசம் வழங்கப்பட்டது.

கியூவில் நிற்கும் வாக்காளர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்பதற்காக வட்ட வடிவில் அடையாளக்குறிகள் போடப்பட்டு இருந்தன.


வாக்குச்சாவடியின் முன்பகுதியில் 2 பிரிவாக ஊழியர்கள் அமர்ந்து இருந்தனர். ஒரு பிரிவினர் ஓட்டு போட வந்த நபர் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து அவரது கையில் சானிடைசரை தெளித்தனர். மற்றொரு பிரிவினர் அவருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப சோதனை நடத்தி, ஒரு பாலிதின் கையுறை வழங்கினார்கள்.

அதை அணிந்ததும் வாக்காளர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அவருடைய அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு ஓட்டு போட அனுமதித்தனர். ஓட்டு போட்டு முடிந்ததும் கையுறையை கழற்றி போட தனியாக பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே மிகவும் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டார்கள்.இதனால் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

இது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக காலையிலேயே பலரும் வந்துவிட்டனர். அதேநேரத்தில் இளைஞர்கள் ஓட்டு போட வேண்டும் என்று அதிக ஆர்வத்துடன் வந்ததை காண முடிந்தது.

வாக்காளர்களுக்கு தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. வெயில் தாக்காமல் இருப்பதற்காக பல இடங்களில் பந்தலும் போடப்பட்டு இருந்தது.

ஓட்டுப்பதிவு தொடங்கியதும் சில வாக்குச்சாவடிகளில் ஓட்டு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாற்று எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்தது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 58 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 23 ஆயிரத்து 200 பேர் மத்திய படையை சேர்ந்தவர்கள்.

மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்து 813 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாகவும், 537 வாக்குச்சாவடிகள் மிக பதட்டம் நிறைந்தவையாகவும் அடையாளம் காணப்பட்டு இருந்தன. அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் அதிரடி படை போலீசார் ஆங்காங்கே ரோந்து சுற்றி வந்த வண்ணம் இருந்தனர்.

பல இடங்களில் சிறு சிறு மோதல்கள் நடந்தன. உடனடியாக போலீசார் அந்த இடங்களுக்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தினார்கள்.

சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து அதிகாரிகள் தேர்தல் பணிகளை கண்காணித்தனர். 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இணையதளம் மூலம் கேமரா இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அவற்றை இங்கிருந்தபடியே கண்காணித்தனர்.

ஓட்டுப்பதிவு இன்று இரவு 7 மணிவரை தொடர்ந்து நடைபெறுகிறது. மாலை 6 மணிவரை அனைத்து தரப்பு பொதுமக்களும் வாக்களிக்கலாம். 6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்புகளுடன் வந்து அவர்கள் ஓட்டு போடலாம்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்படும். அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

அங்கு அவைகள் அறைகளில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்படும். அந்த இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டோடு தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் இன்னும் 5 கட்ட தேர்தல் நடக்க இருக்கின்றன. ஏப்ரல் 29-ந் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறும். அதை தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News