ஆன்மிகம்
தியாகராயநகரிலுள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி.

கோவில், வீடுகளில் கொலு வைத்து நவராத்திரி விழா தொடக்கம்

Published On 2020-10-19 02:18 GMT   |   Update On 2020-10-19 02:18 GMT
கோவில்கள் மற்றும் வீடுகளில் நவராத்திரியையொட்டி கொலு வைத்து நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது.
நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி முடிவடைகிறது. வருகிற 25-ந்தேதி சரஸ்வதி பூஜையும், 26-ந்தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.

இந்த நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். அந்தவகையில் சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் சாமி கோவிலில் கொலு வீற்றிருக்கும் கற்பகாம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, திருமுறை பாடல்களோடு தீபாராதனை காண்பிக்கப்பட்டு நவராத்திரி விழா நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியது. விழா நாட்களில் தினசரி மாலை 6½ மணி முதல் 7½ மணி வரை லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், திருமுறை பாடல்களோடு தீபாராதனையும் http://www.youtu-be.com/c/MYLAPORE KAPALEESWARAR TEMPLE என்ற இணையதளத்தின் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. அத்துடன் விழா நாட்களில் அம்பிகையின் சிறப்புகளை விளக்கும் சொற்பொழிவுகளும் நடக்கிறது.

108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்த பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நவராத்திரி உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு, நேற்று முதல் நவராத்திரி உற்சவம் தொடங்கியது.

இதையொட்டி ஒவ்வொரு நாளும் வேதவல்லி தாயார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள்ளேயே உட்புறப்பாடு நடந்தது.

நவராத்திரி உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு கமல வாகனத்தில் உட்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளி வாகனத்திலும், நாளை 19-ந்தேதி சேஷ வாகனத்திலும், 20-ந்தேதி யாளி வாகனத்திலும், 21-ந்தேதி கேடய வாகனத்திலும், 22-ந்தேதி கேடய வாகனத்திலும், 23-ந்தேதி அம்சா வாகனத்திலும், 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கேடய வாகனத்திலும் உட்புறப்பாடு நடக்கிறது. இந்த உட்புறப்பாட்டின் போது பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில், திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இதேபோல் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளிலும் கொலு வைத்து உறவினர்கள், நண்பர்களை அழைத்து காண்பித்து நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
Tags:    

Similar News