செய்திகள்
கோவை ரெயில் நிலையம்

கோவை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் சோதனை

Published On 2021-07-16 03:39 GMT   |   Update On 2021-07-16 03:39 GMT
கோவை ரெயில் நிலையத்துக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 7.30 மணிக்கு மர்மநபர் ஒருவர் போனில் பேசினார். கேரளாவில் இருந்து 2 பேர் கோவை வருகிறார்கள். அவர்கள் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து தகர்க்க உள்ளனர் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

மர்மநபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து சென்னை போலீசார், கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இங்குள்ள போலீசாரை உஷார் படுத்தினர். உடனடியாக மிரட்டல் விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதி, பிளாட்பாரம், தண்டவாளம், பார்சல் ஏற்றி இறக்கும் இடம், கார் பார்க்கிங் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர். மேலும் இன்று காலை கேரளா மற்றும் சென்னையில் இருந்து வந்து செல்லும் அனைத்து ரெயில்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

ரெயில் நிலைய நுழைவுவாயிலிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் அவரது உடைமைகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பயணிகள் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். போலீசாரின் தீவிர சோதனையால் பயணிகளும் பதட்டத்துக்குள்ளாகி பரபரப்பு நிலவியது.

பல மணி நேரமாக சோதனை நடத்திய பிறகும் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன்பிறகே பயணிகளும், போலீசாரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

இருந்தாலும் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி தொடர்ந்து கண்காணிக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கோவை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்? என கண்டுபிடித்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மிரட்டல் விடுத்த நபர் போனில் பேசும்போது தான் மதுபோதையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் போதையில் இவ்வாறு மிரட்டல் விடுத்தாரா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News