செய்திகள்
விஜயகாந்த்

தற்கொலை என்பது தீர்வல்ல- ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை குறித்து விஜயகாந்த் அறிக்கை

Published On 2020-09-12 10:47 GMT   |   Update On 2020-09-12 10:47 GMT
தற்கொலை என்பது தீர்வல்ல என்று மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை குறித்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி இன்று தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாக பேசிய ஆடியோவில் கூறியுள்ளார். கடந்த வாரம் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களிடையே நீட் தேர்வு பெரும் மன அழுத்ததை ஏற்படுத்துவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை முதலில் மாணவர்கள் கைவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மதுரை மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன். தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை முதலில் மாணவர்கள் கைவிட வேண்டும். தற்கொலை என்பது தீர்வல்ல. வருங்காலம் என்பது இளைஞர்களின் கையில் இருக்கிறது. வாழ்க்கையை துணிவோடு எதிர்கொண்டு முன்னோக்கி செல்லும் போதுதான் பல வெற்றி, தோல்விகளை சந்திக்க முடியும். ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் திறன் படைத்தவர்கள் நமது மாணவ சமுதாயத்தினர்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News