செய்திகள்
சத்துவாச்சாரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி அச்சத்தை போக்க கர்ப்பிணிகளுக்கு ‘கவுன்சிலிங்’

Published On 2021-07-07 07:45 GMT   |   Update On 2021-07-07 07:45 GMT
கர்ப்பிணிகளிடையே தடுப்பூசி குறித்த அச்சம் விலகவில்லை. குறைந்த அளவிலான கர்ப்பிணிகளே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது‌.

அங்கு அவர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சத்துவாச்சாரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கண்மணி முன்னிலையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் ஒரேநாளில் மாவட்டத்தில் 12 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

எனினும் கர்ப்பிணிகளிடையே தடுப்பூசி குறித்த அச்சம் விலகவில்லை. குறைந்த அளவிலான கர்ப்பிணிகளே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டினர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் மற்றும் தயக்கம் காட்டுகின்றனர். ஆர்வம் உள்ள சிலருக்கு அவர்களின் குடும்பத்தினர், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கூறுவதால் அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதில்லை. எனவே கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுக்கின்றனர்.

தேவைப்படும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியால் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாளில் 12 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களின் விருப்பத்தின்பேரில் தடுப்பூசி செலுத்தப்படும்.


Tags:    

Similar News