பெண்கள் உலகம்
தொழில் தொடங்க தனி நபர் கடன் கைகொடுக்குமா?

தொழில் தொடங்க தனி நபர் கடன் கைகொடுக்குமா?

Published On 2021-12-07 03:42 GMT   |   Update On 2021-12-07 03:42 GMT
தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். ஆனால் அதற்கான வழிகாட்டி சரியான முறையில் கிடைத்தால், அவர்கள் முன்னேறி விடலாம்.
தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். ஆனால் அதற்கான வழிகாட்டி சரியான முறையில் கிடைத்தால், அவர்கள் முன்னேறி விடலாம். அதே நேரத்தில் தொழில் தொடங்க கடன் வாங்கி அவதிப்பட்டவர்களும் உண்டு.

வங்கிகளில் தொழில் கடன்

புதிதாக தொழில் தொடங்குபவர் கள் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதலில் குறைவான வட்டி தரும் வங்கிகளை அணுகி தொழில் கடன் பெறலாம். தாங்கள் செய்ய இருக்கும் தொழில் திட்ட மதிப்பீட்டை காண்பித்து அரசு மானிய சலுகைகளுடன் தொழில் கடன் பெறலாம். ஏனெனில் இந்த கடனை புதிய தொழில் முனைவோர்கள் எளிதில் அடைத்து விடலாம். கடன் எளிதாக கிடைக்கிறதே என்று வங்கிகளில் தனிநபர் கடன் வாங்கி சிரமப்பட வேண்டாம். ஏனெனில் மற்ற கடன்களை காட்டிலும் இதற்கு வட்டி அதிகம்.

தனிநபர் கடனை பொறுத்தவரை எதற்காக அதை வாங்குகிறோம் என்ற காரணத்தை கூட வங்கிகளில் சொல்ல வேண்டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்சம் ரூபாய் குறையும் போது மீதி பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாக காட்ட வேண்டி வரும்.

கடைசி முயற்சி

கடனை சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் அதை எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் தனிநபர் கடனை(பர்சனல் லோன்) வாங்கி பயன்படுத்தி கொள்கிறார்கள். வட்டி மிக அதிகம் என்பதால் தனிநபர் கடன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்வது நல்லது. வங்கிகள் இப்போது தாராளமாக தனிநபர் கடன் தர காத்திருக்கின்றன.

பொதுவாக, இந்த கடனுக்கு 14 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. தனிநபர் கடன் வாங்க குறைவான ஆவணங்களை கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். 3 நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12 அல்வது 48 மாதங்களில் கடனை திரும்பக் கட்டலாம்.

வட்டியில் பேரம் பேசலாம்

தனிநபர் கடன் வாங்கும் வங்கியிலேயே உங்கள் சம்பளக்கணக்கோ, கிரெடிட் கார்டோ இருந்தால் இந்த பேரம் நிச்சயம் கை கொடுக்கும். உங்களின் சம்பளம் மற்றும் திரும்பக் கட்டும் தகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வட்டியில் பேரம் பேசிக் குறைக்கலாம். பரிசீலனை கட்டணத்திலும் பேரம் பேசலாம்.

வட்டியை பொறுத்தவரையில் கடன் தொகை, திரும்ப செலுத்தும் ஆண்டுகள், வேலையின் தன்மை, சம்பளத்தொகை, சம்பளம் வாங்குபவரா அல்லது தொழில் செய்பவரா, வாங்கும் நபரின் கடன் வரலாறு போன்றவற்றை பொறுத்து மாறுபடும். வங்கி கொடுக்கும் சலுகை அல்லது வாக்குறுதியை எழுத்து மூலம் பெற்றுக்கொள்வது அவசியம். 2 நபர்கள் கேரண்டி கையெழுத்துப் போட வேண்டி இருக்கும்.

மாதத்தவணை

தனிநபர் கடன் வட்டி எந்த முறையில் கணக்கிடப்படுகிறது என்பது மிக மிக முக்கியம். பிளாட் வட்டியா?அல்லது குறையும் வட்டியா? என்பதைக் கவனிக்க வேண்டும்.பிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொத்த ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். உதாரணத் துக்கு ஒருவர் 15 சதவீதம் வட்டியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம்.

பிளாட் வட்டி என்றால் மாதத்தவணை ரூ.4,028ஆக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டுகளில் வட்டி மட்டும் ரூ.45 ஆயிரம் கட்டி இருப்பீர்கள். இதுவே குறையும் வட்டி முறை என்றால் கடன் தொகை குறைய, குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டியைக் கணக்கிடுவார்கள். மாதத்தவணை ரூ.3,476 ஆக இருக்கும். இம்முறையில் மொத்த வட்டி ரூ.24 ஆயிரத்து 795. அதாவது குறையும் வட்டி முறையில், பிளாட் வட்டியைவிட ரூ.20,205 குறைவாகக்கட்டினால் போதுமானது.

வங்கிகள் ஒத்துக்கொள்வது இல்லை

தனிநபர் கடனை முன்கூட்டியே அடைக்க பெரும்பாலான வங்கிகள் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்வது இல்லை. இடையில் கடனை அடைப்பதாக இருந்தால் அபராத தொகை கட்ட வேண்டி வரும். இது பாக்கியுள்ள கடன் தொகையில் சுமார் 5 சதவீதமாக இருக்கும். சில வங்கிகள் மீதமுள்ள தொகையில் 25 சதவீதம் வரை ஓராண்டில் அபராதம் இல்லாமல் கடனை கட்ட அனுமதிக்கின்றன.

சில வங்கிகள் 6 அல்லது 12 மாதங்களுக்கு பிறகே கடனை முன் கூட்டியே மொத்தமாக அடைக்க ஒப்புக் கொள்ளும். இந்த விவரம் கடன் ஒப்பந்தத்தில் இருக்கும்.நேரம் இருக்கும் பட்சத்தில் சில வங்கிகளில் வட்டி விகிதம், வட்டி கணக்கிடும் முறை, பரிசீலனைக் கட்டணம், முன் கூட்டியே கட்டுவதற்கான அபராதம் போன்றவற்றை விசாரித்து முடிவு செய்வது நல்லது.
Tags:    

Similar News