செய்திகள்
முத்தரசன்

மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது- முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2021-03-25 14:57 GMT   |   Update On 2021-03-25 14:57 GMT
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றி உள்ளது என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேது செல்வம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மத்தியில் ஆளும் மோடி அரசு நிலைகுலையச் செய்தது. காங்கிரஸ், தி.மு.க. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பதும் உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவருக்கு நம்பிக்கை இருந்தால் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். தட்டாஞ்சாவடியில் வெற்றி பெறமுடியாது என்று கருதி ஏனாம் தொகுதியிலும் போட்டியிடுகிறார். சந்தர்ப்பவாத கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் 2 தொகுதிகளில் ரங்கசாமி போட்டியிடுகிறார்.

மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றி உள்ளது. இப்படிப்பட்ட கூட்டணி கட்சிகளை மக்கள் ஆதரிக்காமல் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News