செய்திகள்
எம்எஸ் டோனி, எம்எஸ்கே பிரசாத்

டோனியின் எதிர்காலம் கேள்விக்குறிதான்?: எம்எஸ்கே பிரசாத் சூசகம்

Published On 2019-10-24 15:20 GMT   |   Update On 2019-10-24 15:20 GMT
டோனியின் விஷயத்தை நாங்கள் கடந்து விட்டோம், தற்போது ரிஷப் பந்த் மீதுதான் முழுக்கவனம் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ராணுவத்தில் சேவை புரிய இருப்பதாக கூறி இரண்டு மாதங்கள் ஓய்வு பெற்று சென்றார்.

அதில் இருந்து தற்போது வரை அவர் இந்திய அணிக்கு திரும்பவில்லை. அடுத்த வருடம் ஜனவரி மாதம் அணிக்கு திரும்பலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த்-ஐ மூன்று வகை கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக உருவாக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. ஆனால் ரிஷப் பந்த் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறுகிறார். இதனால் டோனியின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது.



இந்நிலையில் இன்று வங்காளதேச அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ரிஷப் பந்துதான் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணியின் அறிவிப்புக்குப்பின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் டோனியின் நிலை குறித்து கேள்வி கேட்டனர். அப்போது நாங்கள் அதில் இருந்து நகர்ந்து கொண்டிருக்கிறோம். தற்போது ரிஷப் பந்த் மீதுதான் முழுக்கவனம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நாங்கள் டோனி விஷயத்தில் இருந்து கடந்து விட்டோம். இதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப்பின் நாங்கள் தெளிவுப்படுத்திக் கொண்டோம்.

நாங்கள் ரிஷப் பந்துக்கு ஆதரவாக இருக்க தொடங்கியுள்ளோம். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை பார்க்க விரும்பினோம். அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், எங்களுடைய கவனம் எல்லாம் ரிஷப் பந்த் மீதுதான் உள்ளது.



உலகக்கோப்பைக்குப் பிறகு இளம் வீரர்கள் மீது நாங்கள் பார்வை செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, எங்களுடைய நடவடிக்கையை நீங்கள் புரிந்து கொள்ளலாம். நாங்கள் உண்மையிலேயே டோனியுடன் விவாதித்தோம்.  இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எங்களது பார்வையை அவர் வரவேற்றார்’’ என்றார்.

இதனால் எம்எஸ் டோனி மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா? என்பது கேள்வி குறியாகத்தான் உள்ளது.
Tags:    

Similar News