செய்திகள்
உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியபோது, அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்த காட்சி.

தேர்தல் பிரசாரம்: உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக கைது

Published On 2020-11-22 01:44 GMT   |   Update On 2020-11-22 01:44 GMT
நாகையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருக்குவளையில் நேற்று முன்தினம் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக அவரை போலீசார் கைது செய்தனர். நேற்று அவர் தனது 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொண்டார். நாகை அக்கரைப்பேட்டையில் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார்.

இதையடுத்து மீன்பிடி துறைமுகத்தில் ஒரு விசைப்படகில் ஏறி கடல் முகத்துவாரம் வரை பயணம் செய்தார். சிறிது தூரம் விசைப்படகை ஓட்டினார்.

படகில் இருந்து கீழே இறங்கியதும் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை கைது செய்தனர். இதை கண்டித்து போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்ததுடன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கைதான அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு..க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவல்துறை எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் எங்களது பிரசாரம் தொடரும். தி.மு.க.வின் பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. நான் சென்ற இடம் எல்லாம் மக்கள் நல்ல எழுச்சியோடு வரவேற்றனர். இது ஆட்சி மாற்றத்திற்கான வரவேற்பு. தி.மு.க.வின் பிரசாரத்தை ஒடுக்கவே ஆளும் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

நேற்றுமுன்தினம் பிரசாரத்தை தொடங்கியபோதும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டேன். இன்று உலக மீனவர் தினம் என்பதால் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து மீனவர்களை சந்திக்கலாம், அவர்களுடைய குறைகளைக் கேட்கலாம் என்று வந்துள்ளேன். இப்போது 2-வது நாளாக என்னை கைது செய்துள்ளனர். தி.மு.க. பிரசாரத்தை கண்டு அ.தி.மு.க. பயப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News