செய்திகள்
தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 17.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறையினர் தகவல்

Published On 2021-10-20 04:27 GMT   |   Update On 2021-10-20 04:27 GMT
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மற்றொரு நடவடிக்கையாக தினமும் கொரோனா பரிசோதனையும் அதிகளவில் நடந்து வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.

ஆரம்ப சுகாதார மையங்கள், சிறப்பு மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது தவிர 4 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர்.

மாவட்டத்தில் 24 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 97 ஆயிரத்து 312 பேர் உள்ளனர். தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த 18-ந்தேதி வரை மொத்தம் 17 லட்சத்து 50 ஆயிரத்து 653 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 12 லட்சத்து 86 ஆயிரத்து 981 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 63 ஆயிரத்து 672 பேரும் போட்டுக் கொண்டுள்ளனர்.

இதேபோல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மற்றொரு நடவடிக்கையாக தினமும் கொரோனா பரிசோதனையும் அதிகளவில் நடந்து வருகிறது. இதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை 19 லட்சத்து 12 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தீபாவளியையொட்டி துணிகளை வாங்குவதற்காக கடை வீதிகளில் தற்போது அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் முககவசம் அணிந்து கொள்வதில்லை. மேலும் சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிந்து அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News