செய்திகள்
கோப்புப்படம்

ரூ.2 கோடி நகை முறைகேடு: குரும்பூர் கூட்டுறவு வங்கியில் 2-வது நாளாக அதிகாரிகள் விசாரணை

Published On 2021-09-21 05:18 GMT   |   Update On 2021-09-21 05:18 GMT
குரும்பூர் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் செலுத்திய டெபாசிட் பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான ‘பாண்ட்’ பத்திரம் கொடுத்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
குரும்பூர்:

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 3,800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த வங்கியில் நகைக்கடன், விவசாய கடன், தனிநபர்கடன் என 500-க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் 5 பவுன் நகைக் கடன்கள் தொடர்பாக இந்த வங்கியில் ஆய்வு செய்த போது பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மற்றும் சார்பதிவாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்த போது வங்கியில் நகை கடனாக பெறப்பட்ட 548 நகை பொட்டலங்களில் 261 பொட்டலங்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும்.

இது தொடர்பாக வங்கியின் தலைவர் முருகேசப்பாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கூட்டுறவு சார்பதிவாளர் ஆழ்வார்குமார், செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்சி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான ‘பாண்ட்’ பத்திரம் கொடுத்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


நகைக்கடனை அரசு தள்ளுபடி செய்ததைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள வங்கியில் வாடிக்கையாளர்களிடம் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குரும்பூர் கூட்டுறவு வங்கியில் இதுவரை உரியவர்களிடம் நகைகள் கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தசூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறைகேடு செய்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை அவர்கள் தங்கள் பெயரில் இருந்து மற்றொருவர்கள் பெயரில் அவசரஅசரமாக பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News