ஆன்மிகம்
பெருமாள்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி

Published On 2020-09-18 08:36 GMT   |   Update On 2020-09-18 08:36 GMT
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாட்டுக்கு தடைவிதித்தும், பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள்கோவில்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நாளை (சனிக்கிழமை) சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில் கோவில்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி உண்டு. ஆனால் சிறப்பு வழிபாடுகள் நடத்த அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்தபெருமாள் கோவிலில் நாளை அதிகாலை 5 மணிக்கு நிர்மாலிய பூஜை, காலை 9 மணிக்கு உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

இதேபோல் பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு உச்ச தீபாராதனை, 10.30 மணிக்கு உச்சகால அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்ச தீபாராதனை நடைபெறும். இதைப்போன்று சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன்கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு அஷ்டாபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு கங்காள தீபாராதனை நடக்கிறது.

ஆஸ்ராமம் திருவேங்கடவிண்ணவப் பெருமாள் கோவிலில் காலை 10 மணிக்கு மகாஅபிஷேகம், 11 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். இதைப்போன்று மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோவில், தோவாளை கிருஷ்ணசுவாமி கோவில், வடசேரி பாலகிருஷ்ணன்கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகரபெருமாள் கோவில், கோட்டார் வாகையடி ஏழகரம் பெருமாள்கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரிமாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும் பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News