உள்ளூர் செய்திகள்
அபராதம் விதிப்பு

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 11 நாட்களில் ரூ.68 ஆயிரம் அபராதம் விதிப்பு- மாநகராட்சி நகர்நல அலுவலர் பேட்டி

Published On 2022-01-12 11:01 GMT   |   Update On 2022-01-12 11:01 GMT
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து கடந்த 11 நாட்களில் மட்டும் ரூ. 68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகர்நல அலுவலர் கூறினார்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. 

இன்று மாவட்டத்தில் 350 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக மாநகர பகுதியில் 204 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்படி, மாநகர் நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி மாநகர பகுதியில் மண்டல சுகாதார ஆய்வாளர்கள் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று தச்சை மண்டலம் வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாசில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் முகக் கவசம் அணியாமல் பணிபுரிந்து வந்த பணியாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.4,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. 

இப்பணியினை சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ தலைமையில் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மேற்கொண்டனர். இன்று மட்டும் 36 கடைகள் ஆய்வு செய்யப்பட்டு அதில் 17 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

இதுகுறித்து மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:& 

தொடர் பண்டிகை காலத்தை யொட்டி பொதுமக்கள் அதிகம் கூடுவதால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா என்பது புதிய நோய் அல்ல. இரண்டு வருடங்களாக கொரோனாவால் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். முகக் கவசம் அணிவதில்லை. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். 

தொடர்ந்து நாங்கள் அபராதம் விதித்து வருகிறோம். ஆனாலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை வழிமுறைகளை கடைபிடிக்காததாக ரூ.68 ஆயிரத்து 200 வசூல் செய்யப் பட்டுள்ளது. 

இதில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.56 ஆயிரத்து 200, சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங் களுக்கு ரூ.7000, விதியை பின்பற்றாத ஒரு கடைக்கு ரூ.5000 என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News