செய்திகள்
பேச்சுவார்த்தை நடத்திய மத்திய மந்திரிகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

Published On 2020-12-04 23:12 GMT   |   Update On 2020-12-04 23:12 GMT
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
புதுடெல்லி:

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நேற்று 9-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு கடந்த 1-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து, சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. இது சுமார் 8 மணி நேரம் நீண்டது.

இந்த பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்ததுடன், எந்த முடிவும் ஏற்படாமல் முடிந்தது. எனவே சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்தார்.

இதுதொடர்பாக, வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறுகையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித ஈகோவும் இல்லை. அவர்களது கவலைகளைப் பரிசீலிப்பதில் அரசு திறந்த மனதுடன் உள்ளது. 5-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உறுதியான தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டெல்லியின் எல்லை பகுதியான நொய்டாவில் உள்ள மயூர் விகார் பகுதி அருகே கூடாரங்களை அமைத்து இரவில் ஓய்வெடுத்தனர்.
Tags:    

Similar News