ஆன்மிகம்
கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி மாதிரி வைகை ஆற்றில் இறங்கினார்

சித்திரை திருவிழா: கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி மாதிரி வைகை ஆற்றில் இறங்கினார்

Published On 2021-04-27 06:04 GMT   |   Update On 2021-04-27 07:48 GMT
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கோவில் பிரகாரத்தில் கள்ளழகர் சித்திரை திருவிழா பக்தர்களின்றி நடத்தப்பட்டது.
அழகர்கோவில் :

மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் வைகை ஆற்றில் இறங்குவது மதுரையின் முத்தாய்ப்பு நிகழ்ச்சி. ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவாக மீனாட்சி அம்மன், அழகர்கோவிலில் இந்த விழாக்கள் மிக விமரிசையாக நடைபெறும்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை காண பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் மதுரையில் கூடுவதுண்டு. இதனால் அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் மதுரை வைகை ஆற்றில் திரண்டு நிற்பது வழக்கம்.

ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்த விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் அனைத்து கோவில்களிலும் வழிபாடுகள், திருவிழாக்கள் நடைபெற்றன. இதனால் மதுரையின் சித்திரை திருவிழாவும் மிக விமரிசையாக கொண்டாடப்படும். அதில் பங்கேற்கலாம் என பொதுமக்கள் மகிழ்ச்சியுற்று இருந்தனர்.

ஆனால் கொரோனா 2-வது அலை காரணமாக கோவில்களில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களின்றி பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருக்கல்யாணம், சட்டத்தேரோட்டம் போன்றவை நடைபெற்றது. ஆனால் திருவிழாக்கள் முடிந்த பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசித்தனர்.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலை மேலும் வேகம் எடுத்ததால் கோவிலில் வழிபாட்டுக்கும் அரசு தடை விதித்தது. இதனால் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கோவில் பிரகாரத்தில் கள்ளழகர் சித்திரை திருவிழா பக்தர்களின்றி நடத்தப்பட்டது.

விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது.



இதற்காக கோவில் உள் பிரகாரத்தில் ஆடிவெள்ளி எனும் மூலிகை நந்தவனத்தில் தத்ரூபமாக மாதிரி வைகை ஆறு அமைக்கப்பட்டிருந்தது.

இதில் வைகை ஆற்றிலிருந்து லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஆறு போல நீர் நிரப்பப்பட்டிருந்தது. அதில் தத்ரூபமாக தாமரை குளம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதில் இறங்குவதற்காக கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி, பச்சை சாத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை, கிளி, பட்டு கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து கை பாரமாக கள்ளழகரை தூக்கி வந்தனர். தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தபோதிலும் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதவிர அழகர்கோவிலின் கோட்டை வாசலான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் முன்பும் ஏராளமானோர் திரண்டு நின்றனர். அவர்கள் அங்கேயே சூடம் ஏற்றி வழிபட்டனர். சிலர் முடி காணிக்கை செலுத்தினர்.

கள்ளழகர் இந்த ஆண்டு வைகை ஆற்றில் இறங்காவிட்டாலும் அந்த பகுதியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். அதில் சிறுவர்கள் கள்ளழகர் வேடம் அணிந்து தண்ணீரை துருத்தி நீரை பீய்ச்சி அடித்தனர். வைகை ஆற்று கரையிலும் பக்தர்கள் மொட்டைபோட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

வைகை ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டிருந்ததால் பலரும் அதில் ஆனந்த குளியல் போட்டனர்.
Tags:    

Similar News