செய்திகள்
கோப்புபடம்

நெல்லையில் இன்று புதிதாக 99 பேருக்கு கொரோனா - மேலும் ஒருவர் உயிரிழப்பு

Published On 2021-04-12 08:27 GMT   |   Update On 2021-04-12 08:27 GMT
கொரோனா பாதிப்புடன் நெல்லையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் மாநகர பகுதியில் மட்டும் 57 பேர் அடங்குவர்.

பாளையில் 12 பேரும், வள்ளியூரில் 6 பேர், ராதாபுரத்தில் 3 பேர், நாங்குநேரியில் 7 பேர், சேரன்மகாதேவி, மானூர், களக்காட்டில் தலா ஒருவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இது தவிர தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், பெங்களூரை சேர்ந்த 9 பேருக்கும் நெல்லையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் கே.டி.சி. நகரில் ஒரே வீட்டில் முதியவர் உள்பட 2 பேர், மூலைக்கரைப்பட்டியில் 2 பேர், பெருமாள்புரத்தில் இளம்பெண் உள்பட 3 பேர், வள்ளியூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன், சிறுமி ஆகியோர் அடங்குவர். இவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 30 வயது டாக்டர் உள்பட 2 பேருக்கு மீண்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் ஏற்கனவே தொற்று பாதிப்புக்குள்ளாகி, அதிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இதனால் நெல்லை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 17,039 ஆக உயர்ந்தது. நேற்று ஒரேநாளில் 109 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,982 ஆக உயர்ந்தது. தற்போது 840 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்புடன் நெல்லையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீபுரத்தை சேர்ந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News