செய்திகள்
இந்தியாவை சேர்ந்த நிதின்மேனன்

கொரோனா தொற்று அச்சம்: ஐ.பி.எல். போட்டியில் இருந்து 2 நடுவர்கள் திடீர் விலகல்

Published On 2021-04-29 07:45 GMT   |   Update On 2021-04-29 07:45 GMT
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஏற்கனவே 5 வீரர்கள் விலகி உள்ளனர்.

புதுடெல்லி:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது டெல்லி, அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பையில் ஏற்கனவே போட்டிகள் முடிந்துவிட்டது. இனி பெங்களூர், கொல்கத்தாவில் போட்டிகள் நடைபெறும்.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து 5 வீரர்கள் விலகி இருந்தனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ டை, கானே ரிச்சர்ட்சன், ஆடம் சம்பா ஆகியோர் அவசரமாக நாடு திரும்பினார்கள். இதேபோல இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் பாதுகாப்பு வளையத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விலகினார். இந்திய வீரர்களில் சென்னையை சேர்ந்த அஸ்வின் பாதியிலேயே விலகினார்.

இதைதொடர்ந்து ஐ.பி.எல். போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் போட்டி தொடர்ந்து நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து 2 நடுவர்கள் விலகி உள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த நிதின்மேனன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால்ரீபல் ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளனர்.


நடுவர் நிதின் மேனனின் சொந்த ஊர் இந்தூர் ஆகும். அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் இருந்து விலகிய மேனன், பால் ரீபலுக்கு பதிலாக மாற்று நடுவர்களை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News