செய்திகள்
கோப்புப்படம்

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த ஜப்பான் உறுதி

Published On 2020-10-12 22:59 GMT   |   Update On 2020-10-12 22:59 GMT
வடகொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க தங்களின் ஏவுகணை தடுப்பு திறன் வலுப்படுத்தப்படும் என ஜப்பான் உறுதி பூண்டுள்ளது.
டோக்கியோ:

வடகொரியாவை ஆட்சி செய்து வரும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் பியாங்யாங்கில் பிரமாண்டமான முறையில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.

இந்த அணிவகுப்பில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் பெரிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா அறிமுகப்படுத்தியது.

வழக்கமாக தனது ஆயுத பலம் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையிலேயே இத்தகைய ராணுவ அணிவகுப்புகளை வடகொரியா நடத்தும்.

இதனிடையே ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளன. அதேசமயம் வடகொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க தங்களின் ஏவுகணை தடுப்பு திறன் வலுப்படுத்தப்படும் என ஜப்பான் உறுதி பூண்டுள்ளது.

தலைநகர் டோக்கியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜப்பான் அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் கட்சுனோபு கட்டோ இதுபற்றி கூறுகையில் “வடகொரியாவின் புதிய ஏவுகணைகளில் சிலவற்றை எங்களின் வழக்கமான உபகரணங்களை கொண்டு சமாளிப்பது கடினம் என்று கூறப்படுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதேசமயம் பன்முகப்படுத்தும் மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிப்பதற்காக எங்கள் விரிவான ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த நாங்கள் உறுதியாக செயல்படும்” என்றார்.
Tags:    

Similar News