ஆன்மிகம்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரம் குறைப்பு

Published On 2021-05-15 06:43 GMT   |   Update On 2021-05-15 06:43 GMT
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கோவில் செயல் அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:-

சித்தூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில். கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஆனால் தற்போது கொரோனா பரவல் ஊரடங்கால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

மாநில அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை அனைத்துக் கடைகளும் இயங்கும். அதற்குமேல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில அறநிலையத்துறை காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு மேல் பக்தர்களை யாரும் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை காணிப்பாக்கம் கோவில் நிர்வாகம் கடைப்பிடித்து வந்த நிலையில் நேற்று மாநில அறநிலையத்துறை காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே கோவில் நிர்வாகம் தெரிவித்த நேரப்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு தினமும் நடக்கும் கல்யாண உற்சவம், திவ்ய தரிசனம், அபிஷேகம் ஆகிய பூஜைகள் தொடர்ந்து நடக்கும். பக்தர்கள் கல்யாண உற்சவம், அபிஷேகம் ஆகிய பூஜைகளில் பங்கேற்க வேண்டுமென்றால் முன் கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதற்கான இணையதளத்தை காணிப்பாக்கம் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பக்தர்கள் பல்வேறு பூஜைகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். அதேபோல் பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கை செலுத்த வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் (இ.உண்டியல்) உண்டியல் காணிக்கை செலுத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News