செய்திகள்
தாளவாடி அருகே காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது.

ஈரோடு மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிய மழை

Published On 2019-10-22 04:24 GMT   |   Update On 2019-10-22 04:24 GMT
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய-விடிய மழை கொட்டியது. அந்தியூர் மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 66.8 மி.மீ மழை பெய்தது.
ஈரோடு:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் விடிய-விடிய மழை கொட்டியது. அந்தியூர் மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 66.8 மி.மீ மழை பெய்தது.

மேலும் பவானிசாகர், பெரும்பள்ளம், அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, ஈரோடு உள்பட மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை வரை மழை பெய்தது.

ஈரோடு மாவட்ட வனப்பகுதியான தாளவாடி, தலமலை பகுதியில் கொட்டிய மழையால் சிக்கள்ளியில் தரைப்பாலம் மூழ்கியது. பாலத்தின் மீது ஆர்ப்பரித்தப்படி மழை வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் தாளவாடி ரோடு துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி மலை பகுதியில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12367 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று 101 அடியை தொட்ட அணை இன்று 102 அடியை எட்டியது. இன்னும் 2 அடி மட்டுமே உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதியும் அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு 10 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் இன்று அதிகாலை 1 மணியளவில் திறக்கப்பட்டது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பவானி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News