செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கலெக்டர்கள்- மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி 28-ந்தேதி ஆலோசனை

Published On 2020-11-25 07:09 GMT   |   Update On 2020-11-25 07:09 GMT
கொரோனா நோய் தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள வருகிற 28-ந்தேதி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் ஊரடங்கில் தொடர்ந்து அமலில் உள்ளது. அந்த வகையில் இன்னும் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மெரினா கடற்கரை உள்பட பொழுது போக்கு பூங்காக்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. 100 பேர்களுக்கு மேல் கூடும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை.

கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி இந்த மாத இறுதியில் கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய உள்ளார்.

இது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “தற்போது ‘நிவர்’புயல் மீட்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். எனவே கொரோனா நோய் தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள வருகிற 28-ந்தேதி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News