செய்திகள்
கோப்புப்படம்

வீட்டு வேலை செய்ததற்காக முன்னாள் மனைவிக்கு ரூ.5.62 லட்சம் இழப்பீடு - சீன கோர்ட்டு அதிரடி

Published On 2021-02-25 21:54 GMT   |   Update On 2021-02-25 21:54 GMT
சீனாவில் வீட்டு வேலை செய்ததற்காக முன்னாள் மனைவிக்கு ரூ.5.62 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
பீஜிங்:

சீனாவில் புதிதாக ஒரு சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது, விவாகரத்து செய்யும்போது, பெண்கள் வாழ்க்கைத்துணைவர் வீட்டில் அதிக பொறுப்புகளை கொண்டிருந்தால் அதற்காக இழப்பீடு கோர முதல்முறையாக உரிமை வழங்கி இருக்கிறது.

இதன்படி, அங்கு வாங் என்ற பெண், பீஜிங் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில் அவர், “திருமணமான 5 ஆண்டுகளில் குழந்தையை கவனித்து, வீட்டு வேலைகளையும் நிர்வகித்து வந்துள்ளேன். அதே நேரத்தில் கணவர் சென் வேலைக்கு செல்வதைத்தவிர வேறு எந்த வீட்டு வேலைகளையும் செய்தது இல்லை. எனவே வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு கடமைகளுக்கு கூடுதல் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, “வாங் உண்மையிலேயே அதிகமான வீட்டு பொறுப்புகளை ஏற்று செய்திருக்கிறார். அவருக்கு வீட்டு வேலை செய்ததற்கு இழப்பீடாக 7,700 டாலர் (சுமார் ரூ.5 லட்சத்து 62 ஆயிரம்) சென் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. மேலும் ஜீவனாம்சமாக மாதம் ஒன்றுக்கு 310 டாலர் (சுமார் ரூ.22 ஆயிரம்) வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு சீனாவில் பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
Tags:    

Similar News